Benefits Of Consuming Soaked Kale Chane Or Chickpeas
கொண்டைக்கடலையில் இரண்டு வகை உண்டு. ஒன்று வெள்ளை கொண்டைக்கடலை, மற்றொன்று கறுப்பு கொண்டைக்கடலை.

வெள்ளை கொண்டைக்கடலை இந்தியாவுக்கு வரும் முன்னரே, கறுப்பான கொண்டைக்கடலை நம் மண்ணை தொட்டுவிட்டது. இப்போது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தில் பெருமளவு விளைவிக் கப்படுகிறது.

சுண்டல் என்றாலே, பொதுவாகக் கறுப்பு கொண்டைக்கடலை சுண்டல் தான். உறுதியாகவும் இனிப்பு சுவை இல்லாமலும் இருப்பதால் உப்பு சேர்த்தோ, வேக வைத்தோ, வறுக்கப் பட்டோ சாப்பிடப்படுகிறது. பொரிகடலை கடைகளில் விற்கப்படும் உப்புக்கடலை, மிகவும் பிரபலமான ஒரு நொறுவை. உடைச்ச கடலை எனப்படும் பொட்டுக்கடலையும் அதற்கு இணையாக பிரபலமானதுதான்.

கறுப்பு கொண்டைக் கடலையில் போலிக் அமிலத்துக்கு அடிப்படை யான போலேட்டும் மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன. இது மாரடைப்பு காரணியான ஹோமோ சிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந் நோய்  வராமல் பாதுகாக்கும் உன்னத உணவு என மருத்துவ துறையினர் கூறுகிறார்கள்.

கர்ப்பிணிகளுக்கு அவசிய தேவையான போலிக் அமிலம், ஆன்டி ஆக்சி டண்ட் தன்மை கொண்ட சாப்போனின் போன்ற பைட்டோ வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன.

வெள்ளை கொண்டை கடலையை விட இதில் நார்ச்சத்து அதிகம், சர்க்கரையை வெளியிடும் பண்பு குறைவு. குளுக்கோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக்கூடியது என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதை பயன்படுத்துகிறார்கள்.

இதன் சாறு இரும்புச்சத்து நிரம்பியது. இரும்புச்சத்து குறைபாடு, ரத்த சோகையை தடுக்க உதவுகிறது. இதில் இரும்புச்சத்து, சோடியம், செலெனியம், சிறிதளவுதுத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன. அளவுடன் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுமந்தம் தீர்க்க உதவும்.

முதிராத கொண்டைக் கடலையில் சிறிதுநீர் விட்டு அருந்த, சீதக்கழிச்சல் உடனடியாகக் கட்டுப்படும். சிறுநீர்ப் பெருக்கி செய்கை இருப்பதால், சிறுநீர் அடைப்பை சரி செய்யும் தன்மை, கறுப்புக் கொண்டைக்கடலை சுடுநீருக்கு உண்டு என்றும் கூறுகிறார்கள்.

கொண்டைக்கடலை செடியின் மீது ஒரு வெள்ளைத் துணியை இட்டு, அதன் மீது படியும் பனி நீரைப் பிழிந்து சேகரிப்பது 'கடலை புளிப்புநீர்' என்று அழைக்கப்படுகிறது. செரியாமை, வாந்தி போன்ற நோய்களுக்கு இந்த புளிப்புநீர் மருந்தாகப் பயன்படுகிறது. கறுப்பு கொண்டைக்கடலை உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.