ரத்தினகிரி பாலமுருகன் மலைக்கோயிலுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட தேர் திருப்பணி முடிவடைந்து, அதன் வெள்ளோட்டம் அடுத்த மாதம் 8 ம் தேதி நடக்கிறது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, சேகர்பாபு ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ரத்தினகிரி கோயிலில் நேற்று நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள்,சப்கலெக்டர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் சங்கர் வரவேற்றார்.

இதில் ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு, தாசில்தார் ஆனந்தன் உள்பட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர். அடுத்த மாதம் 8 ம் தேதி நடக்கும் புதிய தேர் வெள்ளோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைக்க அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, சேகர்பாபு, எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த் உள்பட முக்கிய பிரமுகர்கள் வர இருப்பதாக விழாக் குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, புதிதாக உருவாக்கப்பட்ட தேரினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டார்.