தமிழ்க்கடல் என, இலக்கிய உலகில் அழைக்கப்பட்ட தமிழறிஞர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர் நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். 77 வயதான இவர், அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில், இன்று காலமானார்.

இவர் தமிழக முன்னாள் முதல்வர் காமராசர், பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசன் உள்ளிட்ட ஆளுமைகளுடன் நெருங்கி பழகியவர். 1970களில் தொடங்கி தமிழ் மேடைகளில் நெல்லை கண்ணனின் குரல் ஒலித்து வந்தது. பாற்கடல் போல் தமிழ் மொழியில் புலமைப் பெற்றிருந்ததால், அவரை பலர் 'தமிழ்க்கடல்' என்றே அழைத்தனர்.

கம்ப ராமாயணம் தொடங்கி எந்த இலக்கியமாக இருந்தாலும் ஆதி முதல் அந்தம் வரை முழுமையாக பேசும் புலமை கொண்ட நெல்லை கண்ணன், அரசியல் ரீதியாகவும் கொள்கை துணிவு கொண்ட பேச்சாளர். இலக்கியப் பேச்சைத் தொழிலாக கருதாத நெல்லை கண்ணன், அரசியல் ரீதியாக பல்வேறு தலைவர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக இருந்த நெல்லை கண்ணன், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியுடன் பல்வேறு முறை கருத்து மோதல்களில் ஈடுபட்டவர். அதேபோல் குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக நெல்லை கண்ணன் மாற்றியவர்.

தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதை சமீபத்தில் பெற்றார். கடந்த 2020ல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய மாநாட்டில் பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் அவருக்கு பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடதக்கது..

முதுமையால் ஏற்படும் உடல்நலக் குறைவு காரணமாக பல்வேறு முறை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது திடீர் மறைவு தமிழ் இலக்கிய உலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.