3 people who were standing at the bus stop were killed when a car collided near Arakkonam

அரக்கோணம் அருகே தாறுமாறாக வந்த கார் மோதி பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பெண் உட்பட 3 பேர் பலியாகினர். இதையடுத்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு கேட்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க கேட்டும் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேரில் வந்து ஆறுதல் கூறிய அமைச்சர் காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் - சோளிங்கர் நெடுஞ் சாலையில் எஸ்.ஆர்.கண்டிகை பஸ் நிறுத்தத்தில் நேற்று மாலை கூலித்தொழிலாளர்கள் பலர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, வேலூரில் இருந்து அரக்கோணம் நோக்கி வேகமாகவும், தாறு மாறாகவும் வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் மாறன் கண்டிகையை சேர்ந்த உண்ணாமலை(45), எஸ். ஆர்.கண்டிகையை சேர்ந்த கன்னியப்பன்(70), புதூர் கண்டிகையை சேர்ந்த சீனிவாசன் (45) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் விபத்து ஏற்படுத்திய காரை சுற்றிவளைத்து பிடித்தனர். இது குறித்து அறிந்ததும் அரக்கோணம் டிஎஸ்பி பிரபு தலைமையில் போலீசார், வருவாய் ஆய்வாளர் குழந்தை தெரேசா, விஏஓ முகமது இலியாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த நபர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் இறங்கினர்.

இதற்கிடையில் சாலை விபத்தில் இறந்த 3 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் அங்கு திரண்டு வந்து இறந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏது மின்றி சாலை மறியலை கைவிட்டு கலைந்து செல்லுங்கள். உங்களின் கோரிக்கைகள் குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி விக்கப்பட்டது.
இதை அவர்கள் ஏற்காமல் மறியலை தொடர்ந்தனர். இதையடுத்து அங்கு எஸ்பி தீபாசத்யன், ஆர் டிஓ பாத்திமா, தாசில்தார் பழனிராஜன், ஒன்றியக் குழு தலைவர் நிர்மலா ஆகியோர் பேச்சுவார்த் தையை தொடர்ந்தனர். ஆனால், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கலெக்டர் சம்பவ இடத்துக்கு வந்து உரிய பதில் அளிக்க வேண்டும். அதுவரை சடலங்களை எடுக்க விடமாட்டோம் என்று ஆவேசமாக கூச்சலிட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து கதர் மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம், இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும். அரசின் நிவாரண உதவிகளும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று சுமார் 5 மணி நேரம் நடந்த மறியலை பொதுமக்கள் கைவிட்டனர். இதை தொடர்ந்து அரக்கோணம் தாலுகா போலீசார் சடலங்களை கைப்பற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அரக்கோணம் தாலுகா போலீசார், விபத்தை ஏற்படுத்திய வேலூர் சாயிநாதபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் (52)

என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கடேசன், வேலூர் அரசு போக்குவரத்துக்கழகம் கொணவட்டம் டெப்போவில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார்.