Today Aadi Kiruthigai


முருகப்பெருமானுக்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில், தைப்பூசம், தை கிருத்திகை, பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, கந்தசஷ்டி விரதம் ஆகியவை முக்கியமான நாட்களாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம், முருகனுக்கு மிகவும் உகந்த நட்சத்திரமாகும்.

கார்த்திகை என்பது முருகனின் பெயர்களுள் ஒன்றான கார்த்திகேயன் என்ற பெயரை குறிக்கும். அதுவே காலப்போக்கில் கிருத்திகை என்று மருவியுள்ளது. எல்லா மாதங்களிலும் கிருத்திகை வரும்.ஆனால் ஆடி கிருத்திகை போன்ற சிறப்பு தை மாதக் கிருத்திகையில் கூட இருக்காது.

உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப்பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த அறுபடை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடி கிருத்திகை விழாவும் ஒன்று.

உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோவில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதிஉலா என விமர்சையாக நடக்கும்.

 தை மாத கார்த்திகையை விட ஆடி மாத கார்த்திகை சிறப்பானதாகும். இது தேவர்களின் மாலைக் காலம் ஆகும். இக்காலத்தில் உப்பில்லா உணவை உண்டு கார்த்திகை விரதம் இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. பலரும், ஆடி மாதத்தில் இருந்து துவங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாத கார்த்திகையில் விரதத்தை முடிப்பார்கள்.

 நட்சத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு வாய்ந்தவையாகும். முருகன் பிறந்தது விசாக நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலு}ட்டி, சீராட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

ஆடி கிருத்திகை அன்று முருகனை மனமுருக வழிபட்டு அருளை பெறுவோமாக..!


🔱🦚ஆடி கிருத்திகையின் சிறப்பு:🔱🦚


 தேவர்களை சிறைப்பிடித்து, மக்களை கொடுமைப்படுத்திய சூரனை வதைக்க வேண்டி ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறுமுகனை வளர்க்கும் பொறுப்பு ஆறு கார்த்திகை பெண்களிடம் கொடுக்கப்பட்டது.

 கார்த்திகைப் பெண்களும் குமரனை பாலூட்டி போற்றி வளர்த்தார்கள். அவனை சேர்த்து ஒன்றாக்கிய உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தி இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால் `கார்த்திகேயன்' எனவும் அழைக்கப்படுவான் என்று கூறி அருளினார். மேலும் அவர்களுக்கு நட்சத்திர பதவியும் அளித்து, இந்த கார்த்திகைப் பெண்களின் நட்சத்திரம் வரும் சமயம் முருகனுக்கு விரதம் இருப்பவர்களுக்கு,அவனருளால் குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்று அருளிச் செய்தார்.
 

இது தான் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம் என்று அழைக்கப்படுகிறது.


 கிழமைகளில் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. திதிகளில் சஷ்டி திதி முக்கிய விரதமாகும். நட்சத்திரத்தில் ‘கிருத்திகை’ முருகனின் நட்சத்திரம் ஆகும். மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமானது.
 
முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும்.

அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.


🔱🦚ஆடி கிருத்திகை விரதத்தின் பலன்கள்:🔱🦚


பொதுவாக செவ்வாயின் அம்சமாக முருகப் பெருமான் பார்க்கப்படுகிறார். அதனால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடைகள், செவ்வாய் தோஷ தடை, புத்திர தோஷம், சகோதரர்களால் சங்கடங்கள், குருதிசை மண், மனை, சொத்து வழக்குகளில் பிரச்னைகள், செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்ட்வர்கள் ஆடிக் கிருத்திகை தினத்தில் முருகப்பெருமானை வணங்கி அனைத்து பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு, சகல ஐசுவரியத்தைப் பெறலாம்.

🔱🦚எளிய முறை கிருத்திகை வழிபாடு:🔱🦚


கார்த்திகை நாளில் கந்த சஷ்டி கவசம் படிப்பது சிறப்பு. அன்றைய தினம் உப்பு சேர்க்காத உணவு சாப்பிடலாம் அல்லது வெறும் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருக்கலாம். மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் குளித்து விட்டு கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து விட்டு சாப்பிடலாம்.
 
கார்த்திகை விரதத்தை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் பின்பற்றுவதால் வாழ்க்கையின் பெரும் வெற்றிகளைப் பெறலாம்.

கார்த்திகை விரதத்தினை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் பின்பற்றி நாரதர் தேவரிஷி என்ற பட்டத்தை பெற்றாராம். திரிசங்கு, பகீரதன், அரிசந்திரன் ஆகியோர் பேரரசர்கள் ஆனார்கள் என்கிறது புராணம்.