Thiruthani Murugan temple Undiyal collection Rs.2 crore


திருத்தணி முருகன் கோயிலில் நடந்து முடிந்த ஆடி கிருத்திகை விழாவில் பக்தர்கள் உண்டியலில் ரூ.2.03 கோடியை காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர்.

இந்தக் கோயிலில் ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி, 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 4 லட்சத்துக்கும் மேற்பட்டபக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறை வேற்றும் விதமாக, மலைக் கோயிலில் உள்ள உண்டியல்களில் ரொக்கம், தங்கம், வெள்ளிப்பொருள்ளை காணிக்கையாக செலுத்தினர்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தக்கார் கோயில் ஜெயபிரியா, துணை ஆணையர் விஜயா ஆகியோர் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள் காணிக்கைப் பணத்தை எண்ணினர்.

இதில், ரூ.1 கோடியே 93 லட்சத்து 57 ஆயிரத்து 307ஐ பக்தர்கள் உண்டியலில் செலுத்தினர். இதேபோல், திருப்பணி உண்டியலில் ரூ.7 லட்சத்து 87 ஆயிரத்து 938-ஐ காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். 544 கிராம் தங்கம், 13,544 கிராம் வெள்ளி செலுத்தப் பட்டிருந்தன. மொத்தம் ரூ.2.03 கோடியை காணிக் கையாக பக்தர்கள் உண்டியலில் செலுத்தியிருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.