சோளிங்கரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி குட் நைட் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிகளில் சோளிங்கர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் அரசு பேருந்துகள் மூலம் பள்ளிக்குச் சென்று கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவ மாணவிகள் சோளிங்கரிலிருந்து அரக்கோணத்திற்கு செல்லும் அரசு டவுன் பஸ்ஸில் சென்றனர். இதில் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் அடங்காத ஒரு சில மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். 

இதனால் பஸ் கண்டக்டர் பஸ் படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டாம் என மாணவர்களும் அறிவுறுத்தினார். ஆனாலும் மாணவர்கள் கண்டக்டரின் பேச்சை மதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பாண்டியநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே அரசு டிரைவர் டவுன் பஸ்சை நிறுத்தி மாணவர்களை எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த அடாவடி மாணவர்கள் நாண்கு பேர் பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். 

இது குறித்து தகவல் அறிந்த சோளிங்கர் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.