வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாராயணன்குப்பத்தில் இருந்து பேருந்தை இயக்கம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து பேருந்தை சிறைப்பிடித்து மக்கள், மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாராயணபுரம் பஸ் நிறுத்தம் பஜனை கோயில் அருகில் வெள்ளிக்கிழமை காலை 8.20 மணி முதல் 9.30 மணி வரை ஆற்காடு - பாணாவரம் செல்லும் அரசு நகர பேருந்து டிஎன் 23, என் 2351 (தடம் எண்:7டி.ஏ)ஆற்காடு பணிமனையில் இருந்து பாணாவரம் நோக்கிச் சென்ற போது, நாராயணன்குப்பம் பொதுமக்கள் மாணவ, மாணவியர் அரசு நகர பேருந்தை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாராயணன்குப்பத்தில் இருந்து பேருந்தை இயக்க கோரிக்கை வைத்து பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள், மாணவ, மாணவிகள்.

அதாவது, காலை 8 மணிக்கு நாராயணன் குப்பத்தில் இருந்து புறப்பட்டு வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, ஆற்காடு செல்லும் நகர பேருந்தை பாணாவரம் வரை நீட்டிப்பு செய்ததால் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி செல்வதற்கு அரை மணி நேரம் காலதாமதமாகவும், மேற்படி பேருந்தை தங்கள் கிராமத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பேருந்தை சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர்.

தகவல் அறிந்து வாலாஜாபேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தீபன் சக்கரவர்த்தி சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையொட்டி, சிறைபிடித்த பேருந்தை விடுவித்து, அனைவரும் கலைந்து சென்றனர்.