ஊராட்சி மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் ஊராட்சியில் 9 வார்டு உறுப்பினர்களைக் கொண்ட ஊராட்சியாக உள்ளது. இதில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் சேட்டு என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார். மேலும் சேட்டு ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்ற நாளிலிருந்து கடந்த ஏழு மாத காலங்களாக ஊராட்சியில் எவ்விதமான பணிகளும் நடைபெறவில்லை கூறப்படுகிறது.

மேலும் ஊராட்சி மன்ற தலைவர் சேட்டு ஊராட்சியில் உள்ள அனைத்து பணிகளுக்கும் கமிஷன் கொடுத்தால் தான் பணிகளுக்கான ஆவணங்களில் கையொப்பம் இடுவேன் என்று கூறியும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதால் ஊராட்சி மன்ற தலைவர் சேட்டு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க கோரி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் இளங்கோ உட்பட ஏழு வார்டு உறுப்பினர்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்களிடம் கோரிக்கை மனுவினை வழங்கினர். 

மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுவின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஊராட்சியில் மொத்தம் உள்ள 9 வார்டு உறுப்பினர்களில் ஏழு வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர மனு அளித்துள்ள சம்பவம் சாத்தூர் ஊராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.