சுகமான அனுபவங்களின் போது, 'மனசு குளிர்ந்து போச்சு' என்கிறோம். மனசு குளிர்ந்து போச்சு என்றால் என்ன? மனசு இல்லாமல் போய் விட்டது! அது, எண்ணங்களின் சலனங்கள் இல்லாத, தெய்வீக மவுனப் பரவச நிலை.
வெளியே அலைகள் சீறிக் கொண்டிருந்தாலும், ஆழ்கடல் அமைதியாகவே இருக்கும். அதுபோல் வெளியே எந்த சூழல் இருந்தாலும், ஆழ்மனதில் பரவச அமைதி நிலைத்திருக்க வேண்டும். அந்த நிலைகுலையாத தன்மையே சமாதி தியான நிலை.

எந்தவித சந்தேகமும் இல்லாமல், தெய்வம் எல்லாவற்றையும் நன்மை யாகவே நடத்தி வைக்கும்' என்று முழு மையான சரணாகதி பக்தி இருந்தால்தான், பரவசம் நிறைந்த சமாதி தியான நிலை கைகூடும்.

சமாதி தியான நிலையில், முழு விழிப்புணர்வு இருக்கும். அதனால், எந்த ஒரு விஷயத்தைப் பார்த்தாலோ, கேட்டாலோ, நினைத்தாலோ, சட்டென்று அவை சார்ந்த அனைத்து தகவல்களும், மடை திறந்த வெள்ளமாய் ஞாபகத்துக்கு வரும். பிறர் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களையும், உணரச்சிகளையும் கூட சட்டென்று அறிந்துகொள்ளும் அதீத சக்தி வரும். இதுவே தெய்வீக சக்தி. இதை அடைந்து தர்மவழியில் வாழ்ந்தால், தெய்வத்துக்கு சமமான மகான்களாக மலரலாம்.

சமாதி தியான நிலையைப் பழகி, தெய்வீக நிலையில் வாழுங்கள் என்று அறிவுறுத்துகிறார், தமிழ்ஞானி திருவள்ளுவர். அவரது அறிவுரைக் குறள்: 'ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல்'.

மனதின் அதிபதி சந்திரன். சந்திரனின் இயல்புநிலை குளுமை. இயல்பு நிலை யில் இருப்பதே சுகம். எந்த சூழலிலும் சலனப்பட்டு சூடாகாமல், இயல்பான குளுமை நிலையில் இருப்பதே, சுகமான தெய்வீக மவுனப் பரவச நிலை; சமாதி தியான நிலை.

இதையெல்லாம் இணைத்துதான். 'சந்திரனின் மத்தியில் அம்பாள் அமர்ந்தருள்கிறாள்' என்று ரகசிய மொழியில் குறிப்பிடுகிறது. லலிதா சகஸ்ரநாமத்தின் 'சந்த்ர மண்டல மத்யகா' என்ற திருநாமம்! இதில் இணைந்துள்ள தியான வழிகாட்டுதல்: பவுர்ணமி சந்தி ரனின் மத்தியில் அம்பாள் அமர்ந்திருக்கும் திருக்காட்சியைத் தியானித்தால், சமாதி தியான நிலை கைகூடி, தெய்வீகப் பரவச நிலையால் மனம் குளிரும்!

அம்பாள், சிவன், பிள்ளையார் ஆகிய மூவருமே சந்திரனைத் தங்கள் சிகையின் முன்பகுதியில் சூடியிருப்பார்கள். இது, 'ஒரே தெய்வம்தான் தாய், தந்தை, குழந்தை என்று விதவிதமான வடிவங்களில் காட்சிய ருள்கிறது' என்ற ஞான உபதேசத்தின் வடிவ ரீதியான விளக்கம்.

சந்திரனை அணிந்துள்ள பிள்ளையா ருக்கு 'பாலசந்திரன்' என்று பெயர். இதன் உச்சரிப்பு மிகமுக்கியம். இதுபற்றி காஞ்சி மகாப்பெரியவரின் விளக்கம்: "பாலசந்திரன் என்ற பிள்ளையார் நாமத்தில், பா என்ற முதல் எழுத்தை அழுத்தமாக்கி, Phaala chandran என்று உச்சரிக்க வேண்டும். அப்போதுதான், சந்திரனைச் சிகையின் முன்பகுதியில் (பாலம் / Phaalam) அணிந்தவர் என்ற சரியான பொருள் வரும். Balachandran என்று 'பா'வை மென்மையாக உச்சரித்தால், 'தேய்ந்து மூளியான வடிவம்' என்ற அர்த்தம் வந்து விடும். இது உசிதமல்ல."

மனதுக்கான நமது ஆன்மீகச் சொல், 'மனஸ்','மன்'. இதே அர்த்தம், உச்சரிப்பு சாயல் கொண்ட ஆங்கிலச் சொல், mind. இது, சந்திரனைக் குறிப்பிடும் moon என்ற சொல்லின் விரிவாக்கம்.

எண்ணங்கள் தாறுமாறாக சலனப்பட்டால், மனம் சூடாகி, மனக்குழப்பம் ஏற்படும். இதன் உச்சம், சித்தப்பிரமை (பைத்தியம்). இதைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல், lunatic. இது சந்திரன் தொடர்பானவற்றைக் குறிப்பிடும் ina என்ற சொல்லின் விரிவாக்கம். சந்திரனையும், மனதையும் இணைக்கும் நமது ஆன்மீகத் தத்துவத்தின் ஆங்கில மொழிக் கலாச்சாரத்திலும் உள்ளது!