Governor Tamilisai who treated the passenger in the air!

தில்லியிலிருந்து சென்ற விமானத்தில் திடீரென மயக்கமடைந்த பயணிக்கு, அதில் பயணம் செய்த மருத்துவரான புதுவை துணைநிலை (பொ) ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதலுதவி சிகிச்சையளித்த நிகழ்வு பாராட்டைப் பெற்றது.

தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை (பொ) ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சனிக்கிழமை அதிகாலை தில்லியிலிருந்து தெலங்கானா மாநிலம், ஹைதராபாதுக்கு விமானத்தில் சென்றார். நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது, அதிகாலை 4 மணியளவில் திடீரென விமானத்தில் மருத்துவர் யாராவது இருக்கிறீர்களா, விமானப் பயணி ஒருவர் மயங்கிய நிலையில் உள்ளார், அவருக்கு உதவ வேண்டும் என விமான பணிப் பெண் அறிவிப்பு செய்தார்.

இந்த அறிவிப்பைக் கேட்ட மருத்துவரான ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்,விரைந்து சென்று அந்தப்பயணியை பரிசோதித்து, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். இதனால், அந்தப் பயணி மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்குத் திரும்பினார். தொடர்ந்து, அவர் அருகிலேயே அமர்ந்து ஆளுநர் பயணித்தார்.

இதையடுத்து, விமானத்தைவிட்டு இறங்கியதும், அந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, சரியான நேரத்தில் தகவல் தந்து ஒருவரின் உயிரைக் காப்பாற்ற உதவிய விமான பணிப்பெண்ணுக்கு ஆளுநர் தமிழிசை பாராட்டுகளைத் தெரிவித்துவிட்டு, ஹைதராபாத் ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டார். விமானத்தில் அவசர காலத்தில் மருத்துவ முதலுதவி சிகிச்சையளித்த ஆளுநர் தமிழிசையை, விமானப் பயணிகள் அனைவரும் பாராட்டினர். இதைசகபயணி ஒருவர் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்து, ஆளுநருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.