ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 46). இவர் கர்ணாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது வீடு காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் அருகே ஜே.சி.கே. நகரில் உள்ளது.
சம்பவத்தன்று மாலை பள்ளிக்கு சென்றுள்ள தன் மகனை அழைத்து வருவதற்காக காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் நோக்கி வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார்.
தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது சுருண்டு கீழே விழுந்தார். இதனை பார்த்த பயணிகள் மறறும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து அங்கு ஓடி வந்தார்.
தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டபோது ஆசிரியர் தணிகாசலம் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ஆசிரியர் மனைவி பிரியா (40) நேற்று காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.