ராணிப்பேட்டை அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கி படிக்கும் 55 மாணவர்களுக்கு கட்டில், போர்வை, பாய், தலையணை உள்ளிட்டவைகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.
ராணிப்பேட்டை பாரதி நகர் பகுதியில், ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைத்தார். பின்னர் ராணிப்பேட்டை காரை கூட்ரோடு அருகே வரும்போது, அப்பகுதியில் அமைந்துள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தில் திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது அரசினர் குழந்தைகள் இல்லத்தில் மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு, உடன் சென்றிருந்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்திக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் இந்த இல்லத்தை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும், என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி குழந்தைகள் இல்லத்தில் தங்கி படிக்கும் 55 மாணவர்களுக்கு அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், அவர்களுக்கு தேவையான பெட்ஷீட், போர்வை, தலையணை, பாய், கட்டில் உள்ளிட்ட பொருட்களை சொந்த நிதியிலிருந்து நேரில் சென்று வழங்கினார். நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி பேசுகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு என்னென்ன அடிப்படை தேவைகள் உள்ளது என்பதை ஆராய்ந்து, அதனை நிவர்த்தி செய்யும்படி தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மாணவர்கள் நன்கு படித்து சமுதாயத்தில் பெரிய அதிகாரிகளாக வரவேண்டும் என்று வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ராதா, ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, இல்ல கண்காணிப்பாளர் விஜயகுமார், மேலாளர் அருள் மணிகண்டன், வாலாஜா தாசில்தார் ஆனந்தன், நகர மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், அப்துல்லா, வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.