அரக்கோணத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவர்களுடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் செஸ் விளையாடினார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை 44-ஆவது உலக சதுரங்கப் போட்டி நடைபெறுகிறது. இதையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் செல் ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டிகள் குறித்த விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளிடையே செஸ் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

இதில் அரக்கோணம் வட்டத்திலுள்ள 10 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இவர்களுடன் ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் இணைந்து விளையாடினார். பின்னர் அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் செஸ் போட்டிகள் குறித்த ஒட்டு வில்லைகளை வாகனங்களில் ஒட்டி ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் ர.பாத்திமா, வட்டாட்சியர் பழனி ராஜன், நகராட்சி ஆணையர் லதா, நகர்மன்றத் தலைவர் லட்சுமி பாரி, துணைத் தலைவர் கலாவதி அன்புலாரன்ஸ், செஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் மோகனசுந்தரம், தினேஷ், சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.