நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70. இந்த நிலையில் அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதாப் போத்தன் தமிழில் மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் மார்த்தாண்டன், ஜீவா, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களை பிரதாப் போத்தன் இயக்கியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் முதல் முறையாக கமல்ஹாசன் நடித்த வெற்றி விழா திரைப்படத்தில் ஸ்டெடி கேமராவை பயன்படுத்தியவர் பிரதாப் போத்தன். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரதாப் போத்தன் தான் இயக்கிய 'மீண்டும் ஒரு காதல் கதை' திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.