திருத்தணி முருகன் கோயிலில் ஆடிகிருத்திகை விழா சனிக்கிழமை கோலாகலமாக நடை பெற்றது. இதில், 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர்.
அறுபடைவீடுகளில் 5-ஆம் படை வீடாக திகழ்கிறது திருத்தணி முருகன் கோயில். இந்தக் கோயிலில் ஆடி கிருத்திகை விழா 21-ஆம் தேதி ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. ஆடி கிருத்திகையையொட்டி, முதல் நாள் (சனிக்கிழமை) தெப்பத் திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷே ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, முருகப் பெருமானுக்கு தங்கக் கீரிடம், தங்க வேல், பச்சை மாணிக்க மரகதக்கல், வைர ஆபரணங்கள் அணிவிக்கப் பெற்று தீபாரா தனை நடைபெற்றது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் வை.சுப் பாரெட்டி, கோயில் தலைமை குருக்கள் ஆகியோர் 15-ஆவது முறையாக திருத்தணி முருகன் மலைக் கோயிலுக்கு பட்டு வஸ்திரம் கொண்டு வந்தனர்.

திருத்தணி கோயில் தக்கார் ஜெய பிரியா, துணை ஆணையர் விஜயா வித்து வரவேற்றனர். அவர்கள், மூலவரை தரிசித்த பின்னர், சண்முகப் பெருமானுக்கு பட்டு வஸ்திரத்தை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடை பெற்றன. முருகன் கோயில் நிர்வாகம் சார்பில், அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஆடி கிருத்திகை விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு குடும்பத்துடன் பங்கேற்று திருப்படிகள் வழியாக மலைகோயிலுக்கு நடந்து சென்று தரிசனம் செய்தார்.
இதேபோல், ஆந்திரமாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.கே. ரோஜா செல்வமணி குடும்பத்துடன் காவடி எடுத்து வந்து மூலவரை வழிபட்டு காவடி செலுத்தினார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம். பூபதி, அனைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார்,திருத்தணி திமுகநகர பொறுப்பாளர் வி.வினோத்குமார், நகர்மன்றத் துணை தலைவர் சாமிராஜ் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர்.

ஆடி கிருத்திகை விழாவில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மலர் காவடி, பன்பன்னீர் காவடி, மயில் காவடி, அன்னக் காவடி எடுத்தும், பம்பை, சிலம்பாட்டத்துடன் பக்திப் பாடல்களை பாடி வாறும் வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

சனிக்கிழமை இரவு வரை சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மூலவரை தரிசித்தனர். மாவட்ட எஸ்.பி. சீபாஸ் கல்யாண் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முதல் நாள் தெப்பல்...: சனிக்கிழமை இரவு முதல் நாள் தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதற்காக, மாலை 6.30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலைப்படிகள் வழியாக சரவணப்பொய்கைக்கு எழுந்தருளினார். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வைக்கப்பட்டு, அங்கு தீபாராதனை நடை பெற்றது. இரவு 7 மணிக்கு நித்யஸ்ரீ மகா தேவனின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது.