குடியாத்தம் அருகே இன்று காலை ஆம்னி பஸ் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே நர்சு பரிதாபமாக உயிர் இழந்தார். உடன் சென்ற அவரது தாய் படுகாயம் அடைந்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காளியம்மன்பட்டி பகுதியைச்சேர்ந்தவர் கிருஷ் மனைவி பிரேமா (வயது 49). இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் வித்யா(வயது 21) சென்னையில் உள்ள தனியார் மருத்து வமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் மகளைப் பார்க்க பிரேமா நேற்று சென்னைக்குப் புறப்பட்டுள்ளார். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மகளை ஊருக்கு அழைத்துவர பிரேமா முடிவு செய்தார். சென்னையில் இருந்து குடியாத்தத்திற்கு இருவரும் மோட்டார் சைக்கிளிலேயே புறப்பட்டுள்ளனர்.
இன்று காலை அலமேல ரங்காபுரம் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழக பணிமனையை ஒட்டி வந்தபோது இவர்களது மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் சென்னையில் இருந்து பெங்களூரை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து ஒன்று வேகமாக வந்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் வித்யா ஓட்டிய மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது. அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து பிரேமா, வித்யா ஆகிய இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதில் வித்யாவின் மீது ஆம்னிபஸ் ஏறி இறங்கியது.
தலை நசுங்கி சாவு
இந்த கோர விபத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே வித்யா பரிதாபமாக உயிரிழந்தார். பிரேமா படுகாயம் அடைந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேமா ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
வித்யாவின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேமா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தாயின் கண் முன்னே தலை நசுங்கி மகள் இறந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.