Chess Olympiad awareness march in Mukundarayapuram and Vanapadi panchayats


முகுந்தராயபுரம், வாணபாடி ஊராட்சிகளில் சதுரங்க ஒலிம்பியாட் விழிப்புணர்வு அணிவகுப்பு நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார்.

44-வது உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 28 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள் தோறும் செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று வாலாஜா ஒன்றியம் முகுந்நராயபுரம் ஊராட்சி அக்ராவரத்தில் விழிப்புணர்வு ஊர்வலம், கோலங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. 

முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அக்ராவரம் முருகன் தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். 

அப்போது தமிழக அரசு பள்ளிகளில் வழங்கி உள்ள செஸ் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி நன்கு செஸ் விளையாட வேண்டும். உலக செஸ் போட்டியானது தமிழகத்தில் நடைபெற உள்ளது. மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இது குறித்து விழிப்புணர்வு அடையும் வகையில், இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு துறைகள் மூலம் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். 

வாணாபாடி ஊராட்சியிலும், ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் மகளிர் திட்ட இயக்குனர் நானில தாசன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாஸ்கரன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் திலகவதி குணசேகரன், லாலாபேட்டை ஊராட்சி மன்ற தலைவர் கோகுல், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள், மாணவ, மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.