ஆற்காடு அருகே வட மாநில தொழிலாளியை தாக்கி பைக் மற்றும் செல்போன் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள மேச் சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் பானிப் பூரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தர்மராஜ்குமார் (29) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில் தர்மராஜ்குமார் தனது ஓனரின் பைக்கை வாங்கிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு ஆற்காட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக வந்துள்ளார். முப்பதுவெட்டி அருகே வந்தபோது அந்த வழியாக ஒரே பைக்கில் வந்த மூன்று பேர் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கி கீழே தள்ளி உள்ளனர். 

நிலை தடுமாறி கீழே விழுந்த அவரிடம் இருந்த செல்போன் மற்றும் அவர் ஒட்டி வந்த பைக்கை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் இருட்டில் மாயமானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த தர்மராஜ்குமார் அவர்களை பிடிக்க துரத்தியுள்ளார். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை.

எனவே இதுகுறித்து அவர் ஆற்காடு டவுன் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்கு பதிவு செய்து பைக் ஆசாமிகளை தேடி வருகிறார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.