முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்க இருப்பதாகத்தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் சனிக்கிழமை கூறியதாவது:
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட்-பி.ஜி. 2022 நுழைவுத் தேர்வு முடிவுகள், கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்தத்தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கவுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுகாதார சேவைகள் இயக்குநர் தலை மையிலான குழு இணைய வழியில் இந்தக் கலந்தாய்வை நடத்தவுள்ளது. இதில், மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பிடித்தமான படிப்பில் சேரலாம்.
அனைத்து மத்திய பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மாநிலக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் சேர்வதற்கு இந்தக் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. மாநில மருத்துவக் கல்லூரிகளிலும், பல் மருத்துவக் கல்லூரிகளிலும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத இடங்களும், மாநில ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத இடங்களும் அளிக்கப்படும்.
வழக்கமாக, முதுநிலை படிப்புகளுக்கான நீட்தேர்வு ஜனவரி மாதம் நடத்தப்பட்டு, மார்ச்சில் கலந்தாய்வு நடத்தப்படும். கரோனா பரவல் காரணமாக தாமதமாக, கடந்த மே மாதம் 21 -ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டு, ஜூன் 1-ஆம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதற்கிடையே, 2021-ஆம் ஆண்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் சேர்வதற்கான சிறப்புக்கலந்தாய்வு, வரும் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. அந்தப் படிப்புகளில் 748 இடங்கள் காலியாக இருப்பதால், அதை வீணடிக்காமல் இருக்க சிறப்புக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது என்றார் அவர்.