தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் ராணிப்பேட்டை, வேலுார் மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களில் நடக்க உள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் மத்திய அரசின் புதிய திட்டமான ‘அக்னிபாத்’ துக்கு வடமாநிலங்களில் பலத்த எதிர்ப்பு காட்டப்பட்டு, அது வன்முறையாக மாறியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் சமூக வலைதளங்கள் முடக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்த மட்டில், வேலுார் உட்பட சில மாவட்டங்களில் இளைஞர்கள் தர்ணா போராட்டம் செய்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் மனு கொடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நாளை காலை சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக கிளம்ப உள்ள நிலையில், இன்று வாகன ஒத்திகை பார்க்கப்பட உள்ளது.
அதன் பின்னர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார் மற்றும் திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களில் முதல்வர் பயணிக்கக்கூடிய சாலை வழிகளில் எல்லாம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து வேலுார் மாவட்டத்தின் ராணுவ கிராமமான கம்மவான் பேட்டையை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் முதல்வர் ஸ்டாலின் பயண வழியில் யாராவது குறுக்கே புகுந்து இடையூறு ஏற்படுத்த திட்டமிட்டு வருகின்றனரா? அரசுக்கு எதிராக யாராவது : சதித்திட்டம் தீட்டியுள்ளனரா? முதல்வர் பயணத்தை சீர்குலைக்க வேறு ஏதாவது திட்டமிடல் நடக்க வாய்ப்புள்ளதா? என்பது குறித்து மேற்குறிப்பிட்ட மாவட்ட போலீசார் தீவிர விசாரணைகள் நடத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.