Ministers inspect construction work on new Collector's Office at Ranipettai


ராணிப்பேட்டையில் புதிய கலெக்டர் அலுவலக வளாக கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த கட்டடத்தை வரும் 20ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் பேசுகிறார்.
இந்நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை நேற்று ஆய்வு செய்தனர். கட்டுமான பணிகள் அனைத்தையும் வரும் சனிக்கிழமைக்குள் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டனர்.

இருவரும் முதலமைச்சரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற விருக்கும் மைதானத்தை பார்வையிட்டனர். அங்கும் பணிகள் தொய்வாக நடப்பதை பார்த்து, விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
மேலும் கட்டுமான பணி மற்றும் விழா மேடை பந்தல் அமைக்கும் பணிகளை தொடர்ந்து கண்காணித்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். ஆய்வின்போது ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், கலெக்டர் பாஸ்கர பாண்டியன், பொதுப்பணித் துறை இன்ஜினியர் சங்கரலிங்கம், உதவி இன்ஜினியர் திரிபுர சுந்தரி மற்றும் அலுவலர்கள், திமுக பிரமுகர்கள் உடனிருந்தனர்.