வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த கத்தாழம்பட்டு ஊராட்சியில் சிங்கிரி கோவில் கிராமம் உள்ளது. இவ்வூரின் வழியே ஓடும் நாகநதியின் வடகரையில், இலங்காமலை அடிவாரத்தில் கி.பி. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த லட்சுமிநரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. வேலூரிலிருந்து கணியம்பாடி வழியாக சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலும், ஆரணியிலிருந்து கண்ணமங்கலம் வழியாக 25 கிலோமீட்டர் தூரத்திலும் இந்தக் கோவில் இருக்கிறது.

துன்பங்களைப் போக்கும் லட்சுமி நரசிம்மர் கோவில்

இக்கோவிலுக்குச் செல்லும் வழியில் ஓடும் நாகநதியில், மழைக்காலங்களில் தண்ணீர் ஓடும். அப்போதெல்லாம் இந்த ஆற்றை கடந்தே கோவிலுக்குச் செல்லமுடியும். மழைக்காலங் களில் ஆற்றில் நீர்வரத்து இருக்கும்போது கோவிலுக்குச் செல்லமுடியாது. எனவே தற்போது பக்தர்கள் வசதிக்காக ஆற்றின் குறுக்கே புதிய தரைமட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

இக்கோவில் முதலாம் ராஜநாராயண சம்புவராய மன்னர் கட்டியது என்பதை கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. இக்கோவிலுக்கு ராஜகோபுரம், கருவறை பின்புறம் உள்ள பாறையில் எவ்வித அஸ்திவாரமும் இன்றி 1,400 ஆண்டுகளாக நிற்கிறது. இக்கோவில் வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஈசானிய மூலையில் புதிதாக கட்டப்பட்ட பால ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது.

இயற்கை எழில் சூழ்ந்த மலையடிவாரத்தில் இருந்து கோவிலுக்குச் செல்ல படிக்கட்டுகள் உள்ளது. விசாலமான கருவறையில் பிரம்மாண்டமாக சுமார் 5 அடி உயரத்தில் சிங்க முகத்துடன், தனது வலது பக்கம் மடியில் லட்சுமியை அமர வைத்துக்கொண்டு கம்பீரமாக லட்சுமி நரசிம்மர் வீற்றிருக்கிறார். அவரது இரண்டு கைகளிலும் சங்கு சக்கரங்களைத் தாங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இங்கு வரும் பக்தர்கள் அனைத்து நலன்களும் கிடைக்க லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்து செல்கின் றனர். மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்புப் பூஜைகள் நடைபெறும். ஆண்டுதோறும் நரசிம்ம ஜெயந்தியன்று சுவாமி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடக்கிறது. இதைக்காண பெங்களூரு, சென்னை, சித்தூர் (ஆந்திரா) உள்பட பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மேலும் ரத சப்தமி விழாவும் இங்கு சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது. இங்கு பரந்த அர்த்த மண்டபம், அதன் எதிரே பலிபீடம், அதன் முன்பு கருடாழ்வார் அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் கருவறையின் வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் அமைந்துள்ள கல்வெட்டுக்கள் சம்புவராயர் மற்றும் விஜய நகர மன்னர்கள் ஆட்சி காலத்தைச் சேர்ந்தவையாகும்.

இக்கல்வெட்டில் இத்திருத்தலப் பெருமாளை ‘அவுபள நாயனார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜய நகர மன்னரின் கல்வெட்டில், இவ்வூர் ‘ஓபிளம்’ எனவும், கருவறை இறைவனை ‘சிங்கபெருமாள்’ எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

விஜய மகாராஜர் குமாரர் சச்சிதானந்த உடையார் கால கல்வெட்டில், முருங்கைப்பற்றை சேர்ந்த மீனவராயன் செங்கராயன் என்பவர், கோவிலுக்கு திருவிளக்கு, நிலம் தானம் அளித்ததாகவும் தெரியவருகிறது. கி.பி. 14-ம் நூற்றாண்டில் முதலாம் சம்புவராய மன்னர் ராஜநாராயணன் என்பவரால் கோவிலாக எழுப்பப்படுவதற்கு முன்னரே, கி.பி. 8-ம் நூற்றாண்டில் லட்சுமி நரசிம்மர் சிறிய சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்திருப்பதை வரலாற்று சான்றுகள் பகிர்கின்றன.

இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

கோவிலில் உண்டியல் கிடையாது. ஆனாலும் பக்தர்கள் நேரடியாக வழங்கும் காணிக்கை மற்றும் நன்கொடைகள் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

அப்போது புதிதாக பாறை மீது ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு அமர்ந்த நிலையிலுள்ள ஆஞ்சநேயர் சேவை சாதித்து வருகிறார்.

எனவே 1,400 ஆண்டுகால பழமைவாய்ந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியை பக்தர்கள் அனைவரும் தரிசித்தால் வேண்டிய நலன்களுடன், பணக்கஷ்டம், மனக்கஷ்டம் தீரும் என்பது நிதர்சன உண்மையாகும்.

அமைவிடம்

இத்திருக்கோவிலுக்குச் செல்ல வேலூரில் இருந்து கணியம் பாடி, கீழ்அரசம்பட்டு வழியாகவும், ஆரணியிலிருந்து கண்ணமங்கலம், காட்டுக்காநல்லூர் வழியாகவும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கணியம்பாடி, கண்ணமங்கலம் ஆகிய இடங்களிலிருந்து ஆட்டோ மூலமும் பயணிக்கலாம். சனிக்கிழமைகளில் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.