இந்திய ரயில்வே உலகின் இரண்டாவது மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்க்காக உள்ளது. இதில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். மேலும் பயணிகள், பயணத்தில் லக்கேஜ்களையும் கொண்டு செல்கின்றனர். ஒருவர் அதிகபட்சமாக எவ்வளவு லக்கேஜ் எடுத்துச் செல்லமுடியும் என்று நிறையப் பேருக்குத் தெரியாது. எனவே இது குறித்து ரயில்வே நிர்வாகம் தற்போது ட்வீட் செய்துள்ளது.

புதிய லக்கேஜ் ரூல்ஸ்:

இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் முதல் பொது போக்குவரத்தாக ரயில் உள்ளது. இதற்கு காரணம் ரயில் பயணத்தில் நேரம் குறைவு, கட்டணம் குறைவு என்பதால் தான். ரயில்வே முதல் தேர்வாக இருப்பதற்கு மற்றொரு காரணம், விமானப் பாதைகளுடன் ஒப்பிடும்போது கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தாமல் மக்கள் அதிக லக்கேஜ்களை எடுத்துச் செல்ல முடியும். ஆனால், அதற்கு இப்போது இந்தியன் ரயில்வே கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதாவது கூடுதல் லக்கேஜ்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை இந்தியன் ரயில்வே கொண்டு வர உள்ளது. இதுகுறித்து இந்தியன் ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் “அதிகமான லக்கேஜ்களுடன் பயணம் செய்தால் உங்கள் மகிழ்ச்சி பாதியாகி விடும்.


அதனால் குறைந்த லக்கேஜ்களுடன் பயணம் செய்யுங்கள், இல்லையெனில் பார்சல் அலுவலகத்திற்கு சென்று லக்கேஜ்களை புக் செய்யுங்கள் என்று பதிவிட்டு இருந்தது. மேலும் முன்பதிவு செய்யாமல் லக்கேஜ்களை பயணத்தின் போது கொண்டு செல்பவர்களுக்கு சாதாரண கட்டணத்தை விட 6 மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல முன்பதிவு செய்யும்போது கூறிய அளவை விட பயணத்தின்போது அதிகமாக லக்கேஜ்களை எடுத்து சென்றாலும் சாதாரண கட்டணத்தை விட 1.5 மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே கூறியுள்ளது.
அதன்படி ஏசி முதல் வகுப்பில் பயணம் செய்பவர்கள் 70 கிலோ வரை இலவசமாகவும், ஏசி 2 அடுக்குக்கு 50 கிலோ வரையும், ஏசி 3 டையர் ஸ்லீப்பர், ஏசி சேர் கார் மற்றும் ஸ்லீப்பர் கிளாஸ் ஆகியவற்றில் 40 கிலோ வரையிலான லக்கேஜ்களை பயணிகள் எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இரண்டாம் வகுப்பில் பயணம் செய்பவர்கள் 25 கிலோ வரை லக்கேஜும், அவற்றிற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 ம் செலுத்த வேண்டும். மேலும் பயணிகள் ரயில் புறப்படும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன் முன்பதிவு நிலையத்தின் லக்கேஜ் அலுவலகத்தில் லக்கேஜ்கள் பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பயணிகள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போதும் அவர்களது லக்கேஜ்களையும் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஏதேனும் குறைபாடுகள், பாதுகாப்பாக பேக்கிங் செய்யப்படாத லக்கேஜ்கள் முன்பதிவு மற்றும் கொண்டு செல்ல ஏற்றுக்கொள்ளப்படாது என குறிப்பிடப்பட்டு உள்ளது.