ராணிப்பேட்டை கெங்காதரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் எல். எப்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விழிப் புணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்தார்.

ராணிப்பேட்டை நகராட்சி கமிஷனர் ஏகராஜ், கெங்காதர பள்ளி நிர்வாகிகள் மீனாட்சிசுந்தரம், பாலாமணி,எல்.எப்.சி., தலைமையாசிரியை குயின் மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவர்கள் "என் குப்பை, என் பொறுப்பு, என் நகரம், என் பெருமை எனும் தலைப்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு, பயன்பாடு தவிர்ப்பு” குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
கெங்காதரா பள்ளியில் மாணவர்கள் அமைத்திருந்த பிளாஸ்டிக் பயன் பாடு தடுப்பு, ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பேசிய கெலெக்டர், பிளாஸ்டிக் என்பது ஒரு வகையில் வரமாக இருக்கும். மற்றொரு வகையில் அது நமது பூமிக்கு மிகப்பெரிய சாபமாகும். நமது பகுதிகளில் நாள்தோறும் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மளிகை கடைகள் என எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக்கை பயன்படுத்தி அதை வெளியில் தூக்கி எறியப்படும் போது பூமியில் அது படிந்து மழைநீர் பூமிக்குள் செல்லாமல் தடைபடுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைகிறது. அதேபோல மழைநீர் தேங்கி கொசுக்கள் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக கை பைகள், பாத்திரங்கள் பயன்படுத்த வேண்டும். குப்பைகளை ஒவ்வொரு வீட்டிலும் இருந்து தூய்மை பணியாளர்களிடம் நாள்தோறும் வழங்கும்போது மக்கும்குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து வழங்க வேண்டும்.
இதனால் அவற்றை அப்புறப்படுத்துவது எளிமையாகி சுற்றுப்புற சீர் கேடு தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை நகராட்சி சுகாதார அலுவலர்கள், தூய்மைப்பணி மேற்பார் வையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.