அபரா ஏகாதசி...!! Apara Ekadashi 2022
சூரிய பகவான் சுக்கிரனுக்குரிய ரிஷப ராசியிலிருந்து புதன் பகவானுக்குரிய மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது. அப்படிப்பட்ட ஆனி மாதத்தில் மகாவிஷ்ணுவை வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த தினமாக ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் வருகின்றது.
இந்த ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் 'அபரா ஏகாதசி" எனவும் அழைக்கப்படுகிறது. அபரா என்றால் 'அபாரமான", 'அளவில்லாத" என்று பொருள்.
வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி தினமாக இந்த அபரா ஏகாதசி தினம் இருக்கிறது. மற்ற எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் இந்த அபரா ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது.
இந்த ஏகாதசி தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதையும் அதனால் நமக்கு உண்டாகும் பலன்கள் என்ன? என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
விரதம் இருக்கும் முறை :
அபரா ஏகாதசிக்கு முந்தைய நாள் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு எந்த உணவையும் உட்கொள்ள வேண்டாம். இரவில், கடவுளின் பெயரை உச்சரித்து கொண்டே வெறும் தரையில் படுத்துறங்க வேண்டும்.
அபரா ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டிட்டு, தாமரை பூ சமர்ப்பித்து மற்றும் நெய்வேத்தியம் வைத்து, தீபமேற்றி வழிபட வேண்டும்.
இந்த நாளில் நோன்பு நோற்பவர் பொய்களையும், தீமைகளையும் பேசக்கூடாது.
இந்த ஏகாதசியில் 'விஷ்ணு சஹஸ்ரநாமம்" பாராயணம் செய்ய இறைவனால் மிகவும் ஆசீர்வதிக்கப்படுவர்.
பலன்கள் :
அபரா ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் பாவங்கள் நீங்கும்.
அளவில்லாத செல்வத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.
மங்காத பேரும், புகழும் கிடைக்கும்.