வேலூரி திருடப்பட்ட லாரியை 700 கி.மீ. தூரம் பயணித்து 550 -க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு செய்து போலீசாரால் மீட்கப்பட்டது.


வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் கடந்த மாதம் 18-ந் தேதி இரவு லாரி ஒன்று திருடு போனது. இதனை கண்டுபிடிக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சத்துவாச்சாரி மற்றும் மாநகர பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் 2 பேர் ஒரு காரில் வந்து லாரியை திருடுவது தெரியவந்தது. அந்தக் கார் வேலூரிலிருந்து எங்கு சென்றது என்பதை அறிவதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யத் தொடங்கினர்.

வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், விருதாச்சலம், ஜெயங்கொண்டம், கும்பகோணம், காரைக்கால் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் 700 கிலோ மீட்டர் பின்தொடர்ந்து சென்று 550 -க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது குற்றவாளிகளை சரியாக அடையாளம் தெரிய முடியவில்லை. இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் மூலமாக செல்போன்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

இதில் குற்றவாளிகள் செல்போன் எண் கிடைத்தது. அவர்களில் ஒருவர் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் டிவாரி, மற்றொருவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.

இவர்கள் மீது 6-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. ஓசூரில் பதுங்கி இருந்த இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். சத்துவாச்சாரி பகுதியில் திருடப்போன லாரி நாமக்கல்லில் மீட்கப்பட்டது.

பின்னர் கைதான 2 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.