பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வு ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்வெழுத விருப்பமுள்ள தனித் தேர்வர்கள். பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை தொடங்கி ஜூலை 4-ஆம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவர்கள் அவரவர் படித்த பள்ளிக்குச் சென்றும், தனித் தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக்கட்டணம் செலுத்தி பதிவுசெய்ய வேண்டும்.

இதில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ஜூலை 5 முதல் 7 ஆம் தேதி வரை தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதற்கு தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக மேல்நிலை வகுப்புக்கு ரூ.1,000, பத்தாம் வகுப்புக்கு ரூ.500 செலுத்த வேண்டும். மேலும், தேர்வுக்கட்டணம், விரிவான தேர்வுக்கால அட்டவணை வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப் பிக்கவுள்ள தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறைப் பயிற்சிக்கு சேர்த்து பதிவு செய்ய வேண்டும்.

இதுசார்ந்த கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.