வாலாஜாபேட்டை அருகே, அகஸ்தீரஸ்வரர் கோவிலில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே வன்னிவேடு பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று இரவு 8:00 மணிக்கு குருக்கள் மனோஜ், 55, கோவிலை பூட்டி விட்டு சென்றார். 

இன்று காலை 6:00 மணிக்கு வந்த போது, கோவில் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.உள்ளே சென்று பார்த்தில், கருவறையில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பித்தளை குத்து விளக்குகள், சொம்புகள், குடங்கள், தங்க மாலை, கேமரா போன்ற பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.

ஷடாரண்ய தலங்களில் மிக முக்கியமானதாக விளங்கும் இந்த கோவிலில் ஞாயிறு தோறும் சரபேஸ்வரர் வழிபாடு நடக்கும். இதில் 50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள். கோவிலில் திருட்டு போனதால் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.

தற்போது ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் கட்டுமன பணிகள் நடந்து கொண்டுள்ளது. இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் 10 க்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்களிடம் வாலாஜாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.