வாலாஜா அடுத்த வேலம் ரோட்டு தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (45). இவரது தம்பி முருகன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். இதனால் முருகனின் மகன்கள் தமிழ்ச்செல்வன்(20) மற்றும் நரேஷ் (19) ஆகிய 2 பேரையும் கண்ணன் தனது பாதுகாப்பில் வளர்த்து வந்தார்.

இதில் தமிழ்ச்செல்வன் வாலாஜாவில் உள்ள தனியார் கேட்டரிங் கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். படித்துக் கொண்டே ஆற்காடு பஸ்ஸ்டாண்டு அருகே உள்ள தனியார் ஓட்டலில் பகுதி நேர வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான தமிழ்ச்செல்வன், தான் சம்பாதிக்கும் பணத்தை குடித்தே செலவு செய்து வந்துள்ளார். இதை கண்ணன் கண்டித்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த தமிழ்ச்செல்வன் ஆற்காடு பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் காம்ப்ளக்சில் உள்ள வேலையாட்கள் தங்கும் அறையில் கடந்த 9ம் தேதி இரவு மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.