ராணிப்பேட்டை மாவட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 9 புதிய வழித்தட மற்றும் நீட்டிப்பு செய்யப்பட்ட அரசுப் பேருந்துகளை இயக்கி வைக்கும் விழா முத்துகடை பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு, 9 புதிய வழித்தட பேருந்துகளை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
பின்னா் அவா் பேசியது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் அனைத்துத் துறைகளிலும் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வரும் மக்களின் அரசாக செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, உடனுக்குடன் இந்த புதிய வழித்தடம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படுகின்றன. மக்கள் கேட்ட உடனே அதை ஆராய்ந்து அவா்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. கோரிக்கைகள் விடுக்கும்போது, அவை நியாயமானதாக இருப்பதை பொதுமக்கள் உறுதி செய்து முன்வைக்க வேண்டும். இதுபோன்று மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீா்க்கும் அரசாக தமிழக அரசு தொடா்ந்து மக்கள் பணியாற்றும். இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ள புதிய வழித்தடங்களில் பேருந்துகளின் வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், தலங்கை முதல் ஆற்காடு வரை புதிய பேருந்து வழித்தடம் வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ராணிப்பேட்டை மாவட்ட பொது மக்களின் நலன் கருதி, பாகாலா - சென்னை, வாலாஜா - பெங்களூரு, ஆற்காடு - கோவிந்தசேரி குப்பம், ஆற்காடு - சீயாம்பாடி, ஆற்காடு - மேல்வல்லம், சோளிங்கா் - நெமிலி, ஆற்காடு - சோளிங்கா், ஆற்காடு- துா்கம், அரக்கோணம் - சோளிங்கா் ஆகிய புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக வேலூா் மண்டல பொது மேலாளா் எஸ்.நடராஜன், நகா்மன்றத் தலைவா்கள் சுஜாதா வினோத் (ராணிப்பேட்டை), ஹரிணி தில்லை (வாலாஜா), ஒன்றியக் குழுத் தலைவா்கள் வெங்கடராமன் (வாலாஜா), கலைக்குமாா் (சோளிங்கா்) , நகா்மன்றத் துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளா் பொண்ணு பாண்டி, தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க சங்க நிா்வாகி ரமேஷ், கிருஷ்ணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.