அரக்கோணம் நகராட்சியில் தூாய்மைப்பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் லதா மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:

‘ராணிப்பேட்டை மாவட்டத்தை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் 27ம் தேதி பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான 'மாஸ் கிளீனிங்' நடத்தப்படுகிறது.

அப்போது ஒவ்வொருவரும் தங்களுடைய வார்டுகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முன்வரவேண்டும். இதில் துப்புரவு பணியாளர்கள் மட்டுமின்றி தன்னார்வலர்கள், தொண்டு நிறு வனத்தினரையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அரக்கோணம் நகராட்சியில் பிளாஸ்டிக்கே இல்லாத நிலைமைக்கு கொண்டு வர அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.