ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் அமைந்துள்ள கோவிலை இடிக்க கூடாது என இந்து முன்னணியினர், பக்தர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


ராணிப்பேட்டை பாலாற்றங்கரையோரம் 35 ஆண்டுகளுக்கு முன்னால் மிசிறி நகர் மனைப் பிரிவில் குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியில் ஒரு காளி கோவில் அமைத்து வழிபாடு நடந்து வந்தது. காலப்போக்கில் கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி புளியங்கண்ணு சேர்ந்த மணி என்பவரிடம் பராமரிக்க ஒப்படைக் கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காளி கோவில் வளாகத்தில் பிரத்யங்கராதேவி கோவில் அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கானோர் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்துக்களின் முக்கிய பண்டிகை நாட்கள் அமாவாசை, பவுர்ணமி சமயத்தில் உலக நன்மை வேண்டி விசேஷ பூஜைகள் நடக்கும்.

இதனால் இந்த பிரத்யங்கரா தேவி கோவில் சுற்றுப்பகுதிகளில் பிரசித்தி பெற்று பல இடங்களில் இருந்த பக்தர்கள் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இங்கு வந்து பூஜை நடத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை நகராட்சி கமிஷனர் கோவில் நிர்வாகத்துக்கு கடந்த 16-ந்தேதி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில் பிரத்யங்கரா தேவி கோவில் அமைந்துள்ள பகுதி நகராட்சி பூங்கா அமைக்க மனை பிரிவு ஏற்படுத்திய நேரத்தில் ஒப்படைப்பு செய்யப்பட்ட பகுதி. ஆகவே கோவில் நிர்வாகம் கோவிலை அப்புறப்படுத்த வேண்டும் மீறினால் நகராட்சி அப்புறப்படுத்தும் என கூறியுள்ளார்.

நகராட்சியின் இந்த அதிரடி நோட்டீஸ் குறித்து தகவல் அறிந்த பக்தர்கள் ஆவேசமடைந்துள்ளனர். இந்த கோவில் இருக்கும் இடத்தை பராமரிக்க மனைப்பிரிவு அமைத்தவர் முறைப்படி ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளார்.

மேலும் வருவாய் துறையினர் இடத்தை பற்றி குறிப்பிடும் போது சிறுவர் பூங்கா மற்றும் பிரத்யங்கிரா தேவி கோவில் இடம் என குறிப்பிட்டுள்ளனர் கூறப்படுகிறது. இந்த கோயிலை சுற்றி மரங்கள் வைத்து பூங்கா போல் பராமரிக் கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் குறிப்பிட்ட இந்த இடத்தின் மீது மட்டும் கண் வைத்து இடிக்க முன்வருவது ஏன் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் கோவிலை இடிக்கக் கூடாது என்று கோரி இந்து முன்னணியினர் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் கோவில் நிர்வாகி மணி மற்றும் பக்தர்களுடன் ராணிப்பேட்டை சப்& கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

அங்கு அவர்கள் பிரத்தியங்கரா தேவி கோவிலை இடிக்க கூடாது என்று கூறி நேர்முக உதவியாளர் சண்முக சுந்தரத்திடம் மனு அளித்தனர். மேலும் அவர்கள் ராணிப்பேட்டை நகராட்சி சேர்மன், ராணிப்பேட்டை கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.