திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கிராமத்தில் வசித்து வரும் சிவசங்கரன்(64), ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.

இவரது ஒரே மகன் சத்தியநாராயணன்(24), இவர் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஒரு கல்லுாரியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு எம்.பி.ஏ. படிப்பில் சேர்ந்துள்ளார். அங்கு மூன்று கல்லுாரி தோழர்களுடன் ஒரே அறையில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் நண்பர் விஜய் என்பவரின் பிறந்த நாளை கொண்டாட நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் கல்லுாரி பேராசிரியர் தேவராஜ் என்பவருடன் அவரது காரில் ஆற்காடு நோக்கி சென்றுள்ளனர்.

அம்முண்டி அருகே ஒரு வளைவில் கார் திரும்பும்போது நிலை தடுமாறி சாலையோரம் உள்ள ஒரு மரத்தில் மோதிவிட்டது. இதில் காரின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த சத்திய நாராயணனுக்கு தலையில் பலத்த காயம்டைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

தகவலறிந்து திருவலம் போலீசார் விரைந்து சென்று மாணவரின் பிரேதத்தை கைப்பற்றி வேலுார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சிவசங்கரன் திருவலம் போலீசில் நேற்று புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.