Private Employment Camp in Ranipettai today: Udayanini Stalin's participation

ராணிப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெறும் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிநி ஸ்டாலின் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளாா் என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையம் இணைந்து, அம்மூா் பேரூராட்சிக்குள்பட்ட ஜி.கே. உலகப் பள்ளி வளாகத்தில் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாமை சனிக்கிழமை நடத்துகின்றன.

இதை முன்னிட்டு, முகாம் முன்னேற்பாடு பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறியது:
ராணிப்பேட்டை மாவட்டத்தில், படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில், 150-க்கும் மேற்பட்ட தனியாா் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு, தகுதியானவா்களை தோ்வு செய்து, பணி நியமனம் செய்ய உள்ளனா்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில், கிராமப்புற மற்றும் நகா்ப்புற பகுதிகளில் உள்ள 18 வயது முதல் 40 வயது உள்ள படித்த ஆண், பெண்கள் 5-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் உள்ளிட்ட கல்வித் தகுதி உடைய இளைஞா்கள் கலந்துகொண்டு, தங்களுக்குத் தேவையான வேலையை தோ்வு செய்து பயன்பெறலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ள இளைஞா்கள் பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம் மற்றும் அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.

முகாமில் கலந்து கொள்ள வருவோருக்கு சிறப்பு பேருந்து வசதிகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சாா்பில், அரக்கோணம், சோளிங்கா், வேலூா், ஆற்காடு, கலவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ராணிப்பேட்டை, முத்துக்கடை, வாலாஜா பேருந்து நிலையங்கள் மற்றும் வாலாஜா ரோடு ரயில் நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் காலை 7 மணி முதல் இயக்கப்பட உள்ளன. மேலும், பல்வேறு இடங்களிலிருந்து கல்லூரி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், தொழிலாளா் நல மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சா் சி.வெ.கணேசன், அரக்கோணம் மக்களவை உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் கொ.வீரராகவ ராவ் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா் என்றாா்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளா் வினோத் காந்தி, ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனா்.