சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்து வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது: சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி ‘விடுதலை போரில் தமிழகம்' என்ற தலைப்பில் இந்திய விடுதலைக்கு பாடுபட்ட தமிழக வீரர்களின் பெருமைகளை விளக்கும் வகையில் பங்கேற்றது. இந்த ஊர்தி வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இம்மாதம் 15ம் தேதி மாலை வரவுள்ளது. இந்த அலங்கார ஊர்தியை மாவட்ட எல்லையான அரப்பாக்கம் பகுதியில் வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி கண்டுகளித்திட ராஜேஸ்வரி திரையரங்கம் எதிரில், முத்துக்கடை பஸ் நிலையம், வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அறிஞர் அண்ணா மகளிர் கல்லூரி, ஆற்காடு பஸ் நிலையம் ஆகிய இடங்களில் நிறுத்தி காட்சிப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதில், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு சிறப்பான வரவேற்பு அளித்து பொதுமக்கள் கண்டுகளித்திட தேவையான முன்னேற்பாடுகளை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) முனுசாமி, கலெக்டர் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.