ஆற்காடு அருகே பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 22 கடைகளுக்கு சுகாதாரத்துறையினர் நேற்று அபராதம் விதித்தனர்.
ஆற்காடு அடுத்த புதுப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் பாபு ராஜ் தலைமையில், வட்டார சுகாதார மேற் பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர்கள் சத்யநாராயணன், அருண்குமார், ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று கிருஷ்ணாவரம், தாழனூர், சாம்பசிவபுரம், ஆயிலம், கத்தியவாடி, வேப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தினர்.

அப்போது, அங்குள்ள பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருட்களை விற்றதாக 22 கடைகளுக்கு தலா ₹100 அபராதம் விதித்தனர்.

மேலும், புகை பிடிக்கவும், புகையிலை பொருட்களை விற்கவும் தடை செய்யப்பட்ட இடம் என்ற அறிவிப்பு பலகை வைக்குமாறு கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.