ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய 1100 சதுரடி விவசாய நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராணிப்பேட்டை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ராணிப்பேட்டை மாவட்ட பிஎம் கேயூஎஸ்யூஎம் திட்டத்தின் கீழ் சூரிய சக்தி மின்சாரம் தயாரித்தல் மாவட்ட குழு அமைத்து விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த 27ம் தேதி கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் வேலாயுதம், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை கரோலின் ஹேமா, மற்றும் கோகுல் ஆகியோர் விவசாயிகள் சூரிய சக்தி மின்சாரம் தயாரித்தல் தொடர்பான பயிற்சிகளை வழங்கினர்.
விவசாயிகள் தங்களது நிலத்தில் 1,100 சதுரடி ஒதுக் கீடு செய்து அவ்விடத்தில் சூரிய ஒளி மின் தகடுகளை அமைக்க வேண்டும். இதற்கான மொத்த 15 லட்சம் தொகையில் 3 லட்சம் மானியமாக வழங்கப்படும். மீதமுள்ள 40 சதவீதம் விவசாயிகள் பங்கு தொகையாக செலுத்த வேண்டும். இதுதொடர்பாக விவரங்கள் அறிய கலெக்டர் அலுவலக நேர்முக உதவியாளரை (வேளாண்மை) தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.