வாலாஜா இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களிடையே கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வாலாஜாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கி, கொரோனா பரவல் தடுப்பு, தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பிரசார ஆட்டோவை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-

பரவி பாதிக்கும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக நகர பகுதிகளில் தொற்று அதிகரிக்கிறது. இதற்கான காரணங்களை ஆராயும்போது, பெரும்பாலும் அடிக்கடி வெளியில் சென்று வந்தவர்களால் தான் பரவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

இதுபோன்ற செயலால் ஆட்டோ ஓட்டுனர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஆட்டோவில் பலதரப்பட்ட மக்கள் பயணம் செய்கிறார்கள். தொற்று பாதிப்பு ஓட்டுனர்களுக்கு ஏற்பட்டு, அவர்கள் மூலமாக பலருக்கும் பரவி பாதிக்கும் நிலை ஏற்பட்டு விடும். எனவே இந்தத் தொற்றில் இருந்து காத்திட ஆட்டோ ஓட்டுனர்களாகிய நீங்களும் உங்கள் குடும்பமும், பயணம் செய்யும் பயணிகளும் நலமுடன் இருக்க அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்

ஆட்டோக்களில் முடிந்த வரை குறைவான பயணிகளை ஏற்றிச் செல்லவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், ஆட்டோக்களில் பயணிகளுக்கும் உங்களுக்கும் உள்ள இடைவெளியை திரை கொண்டு அடைக்கவும், தடுப்பூசிைய தவறாமல் போட்டுக் கொள்ளவும், தடுப்பூசி மட்டுமே தொற்றில் இருந்து 100 சதவீதம் மனிதர்களை பாதுகாக்கும் என்பதை உணர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இந்தக் கருத்துகளை பின்பற்றி ஆட்டோ ஓட்டுனர்கள் வரும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலாளர் ரகுநாதன், வட்ட தலைவர் அப்துல் ஷரிப், குமார், தாசில்தார் ஆனந்தன், நகராட்சி ஆணையாளர் சதீஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.