இந்தியாவில் கொரோனா தொற்றின் 3வது அலை பல மாநிலங்களில் துவங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழ்நாடு உட்படப் பல மாநிலங்களில் பல முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் நாட்டின் முக்கிய வர்த்தக நகரங்களிலும், பெரு நகரங்களிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.Advertisement

இந்நிலையில் 2020 முதல் ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து ஜெர்மனி பல்கலைக்கழகம் ஒரு முக்கியமான ஆய்வை செய்துள்ளது.

கொரோனா தொற்று குறித்து உலகம் முழுவதும் பல ஆய்வுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், ஜெர்மனி நாட்டின் Bochum பகுதியில் இருக்கும் முன்னணி பப்ளிக் ஆராய்ச்சி பல்கலைகழகமான Ruhr-Universität ஐரோப்பிய மத்திய வங்கியுடன் இணைந்து காகித நாணயங்கள் வாயிலாகக் கொரோனா தொற்று பரவுமா என்ற ஆய்வை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், வியட்நாம், இந்தோனேஷியா போன்ற காகிதம் நாணயங்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் 3வது அலை துவங்கியுள்ள காரணத்தால் தொற்றைக் குறைக்க ரூபாய் நோட்டுகளைப் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
ஜெர்மனி நாட்டின் Ruhr-Universität பல்கலைக்கழகம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி இணைந்து செய்த இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஆய்வுகள் இந்தியாவுக்குச் சாதகமான முடிவுகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காகித ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவுகிறதா என்பதை ஆய்வு செய்யப் புதிய ஆய்வு முறையை உருவாக்கி அதன் மூலம் Ruhr-Universität ஆய்வுப் பணிகளைத் துவங்கியது. ஆய்வுகள் துவங்கும் முன்பு காகித ரூபாய் நோட்டுகள் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் அடிப்படையில் நிலையான வர்த்தக முறையில் காகித நாணயங்கள் மூலம் SARS-CoV-2 வைரஸ் பரவ வாய்ப்புகள் மிகவும் குறைவு என இந்த ஆய்வுகள் முடிவுகள் கூறுகிறது.

Ruhr-Universität பல்கலைக்கழகம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி இணைந்து பல மாதங்களாகச் செய்யப்பட்ட ஆய்வில் பல யூரோ நாணயம் மற்றும் காகித நாணயத்தை வைரஸ் சொல்யூஷன் பல திரவு தன்மையுடன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெட்டியில் வைத்து ஆய்வு செய்துள்ளனர்.
இந்தச் சோதனையில் 10 யூரோ காகித நோட்டுகளில் இருந்த வைரஸ் வெறும் 3 நாட்களுக்குள் முழுமையாக மறைந்துள்ளது. இதேபோல் 10 சென்ட், 1 யூரோ, 5 சென்ட் நாணயங்களில் 6 நாட்களுக்குப் பின் எவ்விதமான வைரஸ் தொற்றும் கண்டறியப்படவில்லை.

மேலும் 5 சென்ட நாணயத்தில் வைரஸ் உயிருடன் இருக்கும் காரணம் வேகமாகக் குறைந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் 5 சென்ட் நாணயம் காப்பரில் உருவானது. காப்பர் உலோகத்தில் வைரஸ் வேகமாக இறப்பதாக அல்லது அழிந்துவிடுவதாக Ruhr-Universität பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் டேனியல் டோட் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த ஆய்வில் பங்குபெற்றவர்கள் அனைத்து விதமான பாதுகாப்புகளைக் கடைப்பிடித்தே ஆய்வுகளில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாதுகாப்பான சூழ்நிலையில் வைரஸ் பரவல் குறைவாக இருந்துள்ளது.


ஆனால் பாதுகாப்பு இல்லாமல் பயன்படுத்தினால் தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல் நம்ம ஊரில் பலருக்கு ரூபாய் நோட்டுகளை எண்ணும்போது எச்சில் தொட்டு எண்ணும் பழக்கம் இருக்கும் காரணத்தால் இந்தப் பழக்கம் மூலம் தொற்றுப் பரவக் கூடுதல் வாய்ப்பு உள்ளது.

இந்த ஆய்வின் மூலம் இந்தியர்கள் புரிந்துகொள்ள வேண்டியது, அனைத்து பாதுகாப்புகள் உடன் இருக்கும் போது காகித நாணய பரிமாற்றத்தில் தொற்றுக்கான வாய்ப்புகள் குறைவு, அதேபோல் எவ்விதமான பாதுகாப்பும் இல்லாமலும், எச்சில் தொட்டு ரூபாய் நோட்டுகளை எண்ணும் போது தொற்று பரவ வாய்ப்புகள் அதிகம் தான். இதனால் மக்கள் உஷாராக இருக்க வேண்டியது எல்லோருக்கும் நல்லது.
தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் ஒப்புதலின் பெயரில் சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 பகுதிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை வணிக வளாகங்கள், கடைகள் திறக்க தடை விதித்துச் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. அடுத்தடுத்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.