சென்னை : பெங்களூரு - சென்னை விரைவுச்சாலை திட்டத்தின் மூன்றாம் கட்ட பணிகளை, தமிழகத்தில் விரைவில் துவக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலான சாலை மேம்பாட்டு பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக, பெங்களூரு - சென்னை இடையே, 240 கி.மீ.,க்கு விரைவுச்சாலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
3 மாநிலங்கள் :

கர்நாடகா மாநிலம், ஒசகோட்டாவில் துவங்கும் இச்சாலை, ஆந்திராவின் சித்துார் மாவட்டம் வழியாக, தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுார் அருகே, இருகாட்டுகோட்டையில் முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்தச் சாலை அமைந்தால், வாகனங்கள் மணிக்கு, 120 கி.மீ., வேகத்தில் பயணிக்க முடியும். பல்வேறு மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பெருகும்.கர்நாடகாவில் இருந்து ஆந்திராவின் சித்துார் வரை முதற்கட்டமாகவும்; சித்துார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் கட்டமாகவும்; சித்துார் மாவட்டம், குடிபலா மண்டலம், ராமாபுரம் கிராமத்தில் இருந்து, தமிழகத்தின் இருகாட்டுகோட்டை வரை, மூன்றாவது கட்டமாகவும், இச்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ரூ.3,472 கோடி :

தமிழகத்தில், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக, 106 கி.மீ.,க்கு இச்சாலை அமைய உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், திருபந்தியூர் அருகே, 700 மீட்டர் மட்டுமே, சாலைக்கு நிலம் எடுக்கப்பட உள்ளது. பொன்னையாறு மற்றும் கொசஸ்தலை ஆற்றை கடந்து, இச்சாலை அமைக்கப்பட உள்ளது வேலுார் மாவட்டத்தில், மஹிமண்டல் கிராமத்தில், 13.3 லட்சம் ஏக்கர் வன நிலங்கள் சாலை பணிக்காக கையகப்படுத்தப்பட உள்ளன. மூன்றாம் கட்ட சாலைப்பணிக்கு மட்டும் மத்திய அரசு, 3,472 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது
கருத்து கேட்பு :

பெங்களூரு - சென்னை விரைவு சாலையின் மூன்றாம் கட்ட பணிகளை விரைவில் துவங்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.காஞ்சி புரம் மாவட்டத்தில் கருத்து கேட்பு கூட்டங்கள் முடிந்துள்ளன. வேலுார் மாவட்டத்தில், வரும், 10ம் தேதி; ராணிப்பேட்டையில், 11ம் தேதி; திருவள்ளூரில், 18ம் தேதியும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இச்சாலை பணிக்கு, கர்நாடகா, ஆந்திராவில் ஒப்பந்ததாரர் தேர்வு நடந்து வருகிறது.

தமிழகத்தில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டம் முடிந்துள்ளது.சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்தும் போது, உரிய இழப்பீட்டை விரைவாக வழங்க வேண்டும்; உள்ளூர் மக்கள் பயன்பாட்டிற்காக, சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும்; சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. அவை பரிசீலிக்கப்படும்.கருத்துகேட்பு கூட்டம் முடிந்தவுடன், சாலைபணிக்கு அனுமதி கேட்டு, சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்