வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு கவரப்பேட்டை வனப்பகுதியில் சூதாட்டம் களைகட்டி நடந்து வந்துள்ளது.

கோடிக்கணக்கான பணத்தை வைத்து அந்தப்பகுதியில் சூதாட்டம் நடந்து வந்ததை கண்டும் காணாமல் இருந்து வந்ததாக பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர் செல்வராஜ் மீது புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், பேரணாம்பட்டு கவரப்பேட்டை வனப் பகுதியில் நடைபெற்ற சூதாட்டத்தில் விளையாடி வென்ற 25 லட்சம் பணத்துடன் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் ஞானசேகரன் குடியாத்தத்தில் இருந்து நாட்றம்பள்ளி நோக்கி சென்றுள்ளார். 

இவரை நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள் வாணியம்பாடி வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் வழிமறித்து 25 லட்சம் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து பேரணாம்பட்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் தனிப் பிரிவு தலைமை காவலர் செல்வராஜ் ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.