அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்...!!

அமைவிடம் :

சென்னையில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் ஒன்று வடபழநி முருகன் கோயில். சென்னைக்கு மேற்கே அமைந்திருக்கிறது.

மாவட்டம் :

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை மாவட்டம்.

எப்படி செல்வது?

சென்னை நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது. சென்னையின் பிற முக்கிய பகுதியிலிருந்து வடபழநிக்கு பேருந்து வசதி உள்ளது.

கோயில் சிறப்பு :

இந்த கோயில் அண்ணாசாமி நாயக்கர் எனும் முருக பக்தர் தனது சொந்த வழிபாட்டிற்காக கொட்டகையுடன் இந்த கோயில் அமைத்தார் எனவும், அங்கு பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் வண்ணப்படத்தை வைத்து வழிபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கோயிலில் பல தெய்வங்களுக்குரிய தனிச் சன்னதிகள் உள்ளன. இங்கு வரசித்தி விநாயர், சொக்கநாதர் சிவன், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் சன்னதிகள், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி என பல சன்னதிகள் இங்கு உள்ளன.

இந்த ஆலயத்தின் மூலவராக பழநி முருகன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார். முருகப்பெருமானின் காலில் பாதரட்சைகளுடன் காட்சியளிக்கிறார்.

பல முருகன் கோவில்களில் இல்லாத ஆஞ்சநேயர் சன்னதி இங்கு உண்டு.

தென்பழநி கோவிலுக்கு செய்வதாக வேண்டிக்கொண்ட காணிக்கைகளை இக்கோவிலில் செலுத்துவதும் உண்டு.

சாதுக்கள் பிரதிஷ்டை செய்த தலம் ஆதலால் இத்தலத்து இறைவனை வணங்குவது சாலச் சிறந்தது. 

அங்காரகன் சன்னதி இத்தலத்தில் தனி சன்னதியாக இருப்பது கூடுதல் சிறப்பு. இவர் முருகனுக்கு மிகவும் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு தங்க தேர் உள்ளது.

கோயில் திருவிழா :

சித்திரை தமிழ்ப்புத்தாண்டு, கிருத்திகை, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகத் திருவிழா, தைப்பூசம் மற்றும் விழாக் காலங்களில் 'தெப்போற்சவம்" நடைபெறுகிறது. ஆனி மற்றும் ஆடிக் கிருத்திகையில் சிறப்பு பூஜை மேற்கொள்ளப்படுகிறது. பங்குனி கிருத்திகை லட்ச்சார்ச்சனை 3 நாட்கள், தெப்பத்திருவிழா 6 நாட்கள். ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரத்துடன் சிறப்பாக நடக்கிறது. 

பிரார்த்தனை : 

இங்குள்ள வடபழநி ஆண்டவரை வழிபட்டால் குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க, வியாபாரம் விருத்தியடைய இத்தலத்து முருகனை வேண்டிக் கொள்ளலாம். கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் பெருமளவில் வருகிறார்கள்.

நேர்த்திக்கடன் :

வேண்டியதெல்லாம் தரும் வடபழநி ஆண்டவர் சன்னதியின் முக்கிய நேர்த்திக்கடன் முடி காணிக்கையாகும். தவிர வேல் காணிக்கை, ரொக்கம் போன்றவற்றை உண்டியலில் செலுத்துகிறார்கள். பால், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் ஆகிவற்றாலான அபிஷேகங்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.