ராணிப்பேட்டை நகராட்சியில் நாளை முதல் கடைகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் திங்கட்கிழமை (நாளை) முதல் கடைகள் திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று ஆணையாளர் செல்வ பாலாஜி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி மேலாளர் தனலட்சுமி, நகராட்சிதூய்மை அலுவலர் அப்துல்ரஹீம், துப்புரவு ஆய்வாளர் தேவிபாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் ஆணையாளர் பேசியதாவது:

நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை பரவல் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு வகையான அதிரடி பணிகள் செவ்வனே நடந்து வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடைகளின் உரிமையாளர்களை நகராட்சிக்கு வரவழைத்து கூட்டங்கள் நடத்தி அனைவரும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 

2000 வியாபாரிகளில் 10 சதவீதம் பேர் மட்டுமே உள்ள கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். மீதம் உள்ளவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகளுடன் திங்கட்கிழமை முதல் வியாபாரம் சம்பந்த மான கடைகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. அதன்படி, வியாபாரிகள் அனைவரும் கொரோனா பரிசோ தனை செய்து கொள்ள வேண்டும். பாசிட்டிவ் இருந்தால் அவர்கள் கடைகளை திறக்க கூடாது. 

திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்கள் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடக்கிறது. இதனை அனைத்து வியாபாரிகளும் பயன் படுத்தி கொண்டு பாசிட்டிவ் இல்லை என்றால் கடைகள் திறக்க அனுமதி உண்டு.

பொதுமக்களுக்கு தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.