ஆம்பூர் அருகே சிதலமடைந்து காணப்பட்ட பயணிகள் நிழற்குடையை புதுப்பித்தும், பெண்கள் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த ராணுவ வீரர்களின் செயல் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களிலிருந்து பல்வேறு மாநிலங்களில் ராணுவ வீரர்களாக பலர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 50க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து ஆம்பூர் ஜவான்ஸ் காக்கும் கரங்கள் என்ற குழுவை அமைத்துள்ளனர். இந்தக் குழுவின் மூலம் விடுமுறையில் வரும் வீரர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு உதவிகளை செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு முழுவதும் கொரானா வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தேர்ந்தெடுத்து வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் அரிசியுடன் மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கினர். அதுமட்டுமில்லாமல் மாணவ மாணவிகளுக்குப் படிப்பிற்காக உதவி தொகை வழங்கி வருகின்றனர். மேலும் சின்னவரிகம் பகுதியில் சிதிலமடைந்த நிழற்குடையை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். 

அதேபோல் மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய தேவலாபுரம் ஊராட்சியில் ஆம்பூர்-பேர்ணாம்பட்டு செல்லகூடிய சாலையில் சிதிலமடைந்து காணப்பட்ட பயணிகள் நிழற்குடை விடுமுறையில் தற்போது வந்துள்ள ஆம்பூர் ஜவன்ஸ் காக்கும் கரங்கள் ராணுவவீரர்கள் ஒன்றிணைந்து புதுப்பித்து உள்ளனர்.

கூடுதலாகப் பயணிக்கும் பயணிகளுக்காகப் பெண்கள் கழிப்பறை ஒன்றும் கட்டியுள்ளனர். தற்போது அப்பகுதி மக்களுக்குப் புத்தாண்டு பரிசாகப் பயணிகள் நிழற்குடை மற்றும் பெண்கள் கழிப்பறையை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் அடைந்து உள்ளனர்.