ராணிப்பேட்டையில் குடிபோதையில் தகராறு செய்தவர் கைது
ராணிப்பேட்டை சிப்காட் நெல் லிக்குப்பத்தில் வசிப்பவர் உமாபதி (52). இவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு அதே ஊரைச்சேர்ந்த சத்தியராஜ் (32) என்பவர் குடிபோதையில் அந்த வழியாக நடந்து செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை தட்டிக்கேட்டவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, கலாட்டா செய்து கொண்டிருந்தார்.
தனது வீட்டின் அருகில் இப்படி தகராறு நடக்கிறதே என்று உமாபதி மகன் விக்னேஷ் (24) என்பவர் சத்தியராஜிடம் சென்று, ஏன் இப்படி தகராறு செய்கிறாய், இங்கிருந்து போ என்று கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சத்தியராஜ், தான் வைத்திருந்த கத்தியால் விக்னேஷை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த மகனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த உமாபதி, ஆண்டாள் ஆகியோர் ஓடி வந்தனர்.
அவர்களையும் சத்தியராஜ் கத்தியை காட்டி மிரட்டியதோடு தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த விக்னேஷ் வேலூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்தியராஜை நேற்று கைது செய்தனர். விக்னேஷ் மீது கத்திக்குத்து நடத்திய சத்தியராஜுக்கு போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.