தமிழகத்தை மிரட்டும் 'மாண்டஸ்' புயல்.
தமிழகத்தில் 'மாண்டஸ்' புயல் தீவிரமடைந்துவரும் நிலையில், இன்று 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் புதுச்சேரி இடையே, கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் 'மாண்டஸ்' புயல் காரைக்காலுக்கு 460 கி.மீ. கிழக்கு - தென்கிழக்கே மற்றும் சென்னைக்கு 550 கி.மி. தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே இன்று 9ஆம் தேதி கரையைக் கடக்கும். இந்த புயல், அதி தீவிர புயலாக மாறி, வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரை அதி தீவிர புயலாகவே நீடிக்கும் என்றும் கணித்துள்ளது. அத்துடன், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஸ்ரீஹரிகோட்டா மற்றும் புதுச்சேரி இடையே, மாமல்லபுரம் பகுதியில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 85 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை நள்ளிரவு கரையை கடக்கும் மாண்டஸ் புயல், படிப்படியாக வலுவிழக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் எச்சரிக்கை மாவட்டங்கள்:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை மாவட்டங்கள்:
திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை மாவட்டங்கள்:
தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 95 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும், வரும் 10ஆம் தேதி வரை மீனவர்கள் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வட இலங்கை கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி விடுமுறை:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.