ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில், ஆற்காட்டில் நெல் சாகுபடி கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் மகாலட்சுமி செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் பாலாஜி லோகநாதன், தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கே எம் பாலு, விமல் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈஷா மண் காப்போம் இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமிஸ்ரீமுகா வரவேற்றார்.
இந்த கருத்தரங்கில் 2 கிலோ விதை நெல்லில் 90 மூட்டை (7,000 கிலோ) மகசூல் எடுத்த தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சாதனை விவசாயி நாகரத்தினம் நாயுடு அதிகமகசூல் எடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய நுணுக்கங்களை விளக்கிப் பேசினார். மேலும் நெற்பயிரை தாக்கும் பூச்சிகள் குறித்தும், அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் பிரபல பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம் பாரம்பரிய அரிசிகளை மதிப்பு கூட்டி விற்பனை செய்தல் குறித்து மதுரை மணியும், நெல் சாகுபடியில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட் பங்கள் குறித்து தமிழக அரசின் விருது பெற்ற பெண் விவசாயி அம்பாசமுத்திரம் லட்சுமி தேவி விளக்கினர்.
இதில் விதை விற்பனை, களையெடுக்கும் கருவி மதிப்பு கூட்டிய பொருள்களின் விற்பனை மற்றும் கண்காட்சி இடம் பெற்றது. மண் காப்போம் இயக்கத்தின் பொறுப்பாளர் சரவணன், இயற்கை விவசாய ஆர்வலர் உதயசங்கர், விவசாயிகள் கலந்து கொண்டனர்.