ஆற்காட்டில் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கி ரூ.25லட்சம் மோசடி செய்து விட்டு மகனுடன் தாய் தலைமறை வானதையடுத்து அவரது மற்றொரு மகனைசிறை பிடித்து பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பூபதி நகரைச் சேர்ந்தவர் செல்வராஜின் மனைவி பாஞ்சாலி (வயது 65). கணவரை இழந்த பாஞ்சாலிக்கு விஜயகுமார்(வயது 28) மற்றும் ஜெயக்குமார் (வயது 27) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் மகன்களின் திருமண செலவு மற்றும் குடும்ப செலவுக்காக அக்கம் பக்கத்தினரிடம் பாஞ்சாலி கடன் கேட்டுள்ளார். ரொக்கமாக சிலர்பணம் கொடுத்ததையடுத்து, சில பேர் வீட்டு பத்திரத்தைக் கொடுத்து பாஞ்சாலிக்கு உதவி செய்துள்ளனர்.
இப்படி ரூ.25 லட்சம் வரை அக்கம் பக்கத்தினரிடம் இருந்து பாஞ்சாலி கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கி 3 வருடங்கள் கழிந்த பின்னரும் சம்பந்தப்பட்டவர்களுக்கு பாஞ்சாலி பணம் மற்றும் வீட்டுப்பத்திரத்தை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் பாஞ்சாலிக்கு நெருக்கடி கொடுத்தனர். இதில் கடந்த 19ம் தேதி பாஞ்சாலி வீட்டை காலி செய்துவிட்டு இளைய மகனுடன் தலைமறைவாகி விட்டார். இதனால் மூத்த மகன் விஜயகுமாரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு முறையிட்டனர். இதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது என்று விஜயகுமார் கூறியுள்ளார்.
இதனை சமாளிக்க முடியாமல் விஜயகுமாரும் நேற்று இரவில் வீட்டை காலி செய்துவிட்டு தப்பியோட முயன்றார். ஆனால் அவர் சென்ற வாகனத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் ஒரு பெண் தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஆற்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.