சோளிங்கர் அருகே நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது ஆட்டோ மோதி தொழிலாளி பலியானார். 8 பேர் காயமடைந்தனர்.

ஆட்டோ மோதல்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பில்லாஞ்சி திரவுபதி அம்மன் கோவில் அருகே நேற்று காலை ஒரு டிப்பர் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையில் இருந்து சோளிங்கரை நோக்கி ஒரு ஆட்டோ வந்தது. அதில் தொழிலலாளர்கள் 10 பேர் இருந்தனர். இந்த ஆட்டோ எதிர்பாராத விதமாக அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இதில் ஆட்டோவில் பயணம் செய்த திருவள்ளூர் மாவட்டம் நொச்சிளி கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால் (வயது 48) என்பவர் படுகாயம டைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் 8 பேர் படு காயமடைந்தனர். அவர்கள் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

சிகிச்சை 


பின்னர் அம்மையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வேண்டா (21), தீபா (20), நந்தினி (30), உடையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோபி (35), நாராயணக் குப்பத்தைச் சேர்ந்த சுமதி (35), முருகேஷ், வள்ளியம்மாள், ஆட்டோ டிரைவர் ஆர்.கே.பேட்டையை சேர்ந்த கர்ணன் (40) ஆகிய 8 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அதே இடத்தில் இறந்த வேணுகோபால் உடலை பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.